Thursday, February 18, 2010

Re: சூழ்நிலை சொல்றேன், கவிதை சொல்ல முடியுமா!?

அற்புதமான கவிதை...அழகான நடை...
மலரட்டும் இதுபோல் நிறைய..
நன்று
ஜெயஸ்ரீ ஷங்கர்.


 
2010/2/17 Balaji Baskaran <bas.balaji@gmail.com>

ஓட்டை விழுந்த கால்சட்டை நினைவுகள்.

 

ஓட்டை விழுந்த கால்சட்டை

ஒழுகும் மூக்கோட

விளக்குமாற்று குச்சி வச்சி

வாள் சண்டை போட்டோமே!

மனதில் மன்னர்களாய் ஆனோமே!

 

ஆத்துக்கால் தண்ணி ஓட

பானைப்பரி மீன் பிடிக்க

பாயும் பானையும் வச்சு போனவன்

வருமுன்னே துள்ளும் மீனை

கையால் திறமையா பிடிச்சோமே!

 

சப்பாத்திக் கள்ளி பழம் திங்க

அதுக்கு நடுவுல முள்ளு இருக்கும்

எச்சரிச்சாங்க கேட்கலையே

வாய்க்குள்ள முள்ளு குத்தி

வந்த வலிய விட

வீட்டில் விசயம் தெரிஞ்சு

விழுந்த அடி இன்னும் மறக்கலையே!

 

மலைக்கோயில் போகும் போது

மலைப்பாம்பு ஒன்னு பெரிசா

ஆட்டை முழுங்கி கிடக்குதுனு

எல்லாரும் பயமுறுத்த தொலைவெட்டில்

பார்த்த பாறையெல்லாம் மலைப்பாம்பு

படுத்திருக்கோனு பயந்தோமே!

 

ஒவ்வொரு ஞாயிறும்

பஞ்சாயத்து தொலைக்காட்சியில்

படம் பார்க்க முண்டியடித்து

இடம் பிடித்தோமே!

 

கண்மாயில் நீச்சல் பழக

மூக்குல தண்ணி போய்

பின் எருமை மாட்டின்

வாலைப் பிடிச்சு நீந்தி வந்தோமே!

பின்பு கேணியில முங்கு நீச்சலடிச்சு

ஒளிச்சு வச்ச சோப்பு டப்பாவ

எடுத்து வந்து சாதிச்சோமே!

 

கையில காசு கிடைச்சா

முக்குக் கடையில்

கல்கோணா வாங்கி

கன்னம் வீங்க ஒதக்கி வச்சிருப்போமே!

 

காமிக்ஸ் புத்தகம் படிச்சிட்டு

நாமும் கதாநாயகனா கற்பனையா

பல வேசம் போட்டிருக்கோமே!

 

ஒத்தையடிப் பாதையில்

களத்துக்கு போயிட்டு திரும்பி

வருகையில சருகு சத்தம் கேட்டு

பாம்பு தொரத்துதுனு பின்னங்கால்

பிடரியில் அடிக்க ஓடினோமே!

 

கிட்டிப்புல்லு சொல்லித் தரேனு

கூட்டி போய் நிக்கவச்சி என்

மண்டையில் விளையாடி ஒடச்சியே!

 

தீப்பெட்டியில் நூல் கட்டி

நம் வீட்டுக்கு இடையில

சன்னலில் வழி

தொலைத் தொடர்பு

சாதனை செஞ்சோமே!

 

கிரிக்கெட் மட்டை வாங்க

பிக் பன் பப்ளிகம் வாங்கி

ஸ்கோர் கார்டு சேர்த்தோம்

அனுப்பி வச்சா மட்டை

கிடைக்கும்னு அண்ணனுங்க சொன்னாங்க

கடைசி வரை அதை

அனுப்ப தெரியலையே!

 

புளியம்பழம் உலுப்ப

மரமேறி செய்த சாகசங்கள்

காரங்காய் சூராம்பழம்

உலுப்பி முள் குத்தி பெற்ற

விழுபுண்கள் மறக்கலையே!

 

மாங்காய் பறிக்க போய்

முசுறு எரும்பு கடிச்சு

முகமெல்லாம் வீங்கியதே!

 

ஆலக் கொட்டகையில்

வெல்லம் காய்ச்சும் வித்தையை

வியந்து பாத்து

கிழவி வெல்லம் கிடைக்கும் வரை

காத்திருந்து பொட்டுக் கடலை

தூவி சாப்பிட்டோமே!

 

வைக்கப்போரில் சறுக்கு விளையாடி

தலைகீழா நான் விழுந்து குடலேறி

ஓத்தவீட்டுக் கிழவி

தொக்கம் எடுத்து விட்டுச்சே!

 

இன்னும் இருக்குதடா என் மனசுல

எத்தனையோ நினைவுகள் பசுமையா

நீயும் நானும் எங்கோ இருக்க,

இந்த நினைவு வந்தாலே

மனசு கனக்குதடா நண்பா!

 
--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!

அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!

தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!

http://balaphotoblog.blogspot.com/

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment