சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!
நிலவுக்குக் கை கால் முளைத்த சிட்டு சீதா...
பாரதி கண்ட கனவை நனவாக்க
காரிகையாய் வளர்ந்து வந்த கனிகையவள்...
தொட்ட இடமெல்லாம் தொல்லையும்,
கால் பட்ட இடமெல்லாம் காமெடியுமாய்...
வளையவர.....
பட்டாம்பூச்சியாய் சிங்காரித்து பள்ளிக்கு
அனுப்பினால்......பாதியிலே..
பரட்டையாய் சுவரேறி குதித்து - பெற்றவரின்
வயிற்றில் புளி கரைத்த தவப்புதல்வி..
வாயாடி, வம்புக்கிழுக்கும்.. குட்டிப் பிசாசு..
வைத்த பெயரை மறக்கடித்து
பட்டப் பெயரிலேயே காலத்தைப் போக்கிய
ரெட்டைவால் ரெங்கநாயகி...
கதிருக் காட்டுக்குள்ளே குதிரு போல் நுழைந்து
கொள்ளையடித்த கருதைஎல்லாம்.திருட்டுத்தனமாய்
பாவாடை பக்கெட்டில் அமுக்கி - கருதும் களவுமாய் பிடிபட,
சிதறிய சொத்தைக் கதிர் மொத்தமாய் காலைவார
அடிக்க வந்த காவலனும் , அதிர சிரிக்க வைக்க ..
பேந்த பேந்த விழித்த ரெட்டைசுழி ரெங்கம்மா..
புளியம்பழ ஆசையால் மரமேறி விழுந்தவளை
கொம்பு தாங்கி பிடிக்க, வௌவாலாய் மரத்தில் தொங்கி
வாங்கிக் கட்டிக்கொண்ட கதை சீதையின் சரித்திரத்தில்
சீம்பாலாய் சுவைக்கிறதே..
பாடம் சொல்லும் வைத்தியாரும்
தப்பவில்லை இவள் தொல்லையால்...
ஊரெல்லாம் வம்பு சீதாவுக்கு கம்பு..
தேறாது, உருப்படாது, இதெல்லாம் எங்கே போய்
குப்பை கொட்டப் போறதோ......இதுபோன்ற
அர்ச்சனையே...ஆசிர்வாதமாய்
நித்தம் வாங்கிய சுடர்மணி திலகம்.....
சீதாவும்..அனைத்தையும் பொய்யாகி...
பட்டமும் கேடயமும், பதக்கமும்,
பரிசும்,சான்றிதழும்..நல்பதவியும்..
பதவிசுமாய் புகழோடு வளைய வர..
சுட்டிப் பெண்ணாய் பார்த்தவர்கள்
வியந்து வாய் பிளக்க..
சீதாபோல் வருமா.... என தட்டை திருப்பிப் போட்டு
தம்பட்டமும் அடித்தனர்..
சீதா மட்டும் தன் மனசுள்...ஆடிய
சுட்டிக் குழந்தையை இறுகக் கட்டிப் போட்டு
பயமுறுத்தி தூங்க வைத்திருந்தாள்..வருடக் கணக்கில்...
என்றாவது ஒருநாள், சுட்டி சீதா விழித்துக் கொண்டால்,
கொண்டாட்டமாய் ஜீன்ஸ் போட்ட வேதாளம்
முருங்கை மரத்தில்... தொங்குமோ..?!!
சேட்டைக்கார மன்னனிடம்...கேள்வி கேட்டு கெடு வைக்க?
ஜெயஸ்ரீ ஷங்கர்.
பின்குறிப்பு:
எளிமையில் இனிமை கண்டு,
இளமை மணம் கொண்டு
புதுமையை நினைவோடு நிறுத்தி
தீஞ்சுவைத் தமிழில் கவி படித்து
பல்சுவையில் சுவைபட எழுத்தமுது படைத்து
எங்களது இதயங்களை திணறடித்த
எங்கள் "இதயக்கனி" சீதாம்மா..
இன்னும் பலகாலம் எங்களோடு கூட உங்கள்
அனுபவ பாடங்களை பகிர்ந்து எங்களை
ஆசிர்வதிக்க வேண்டுகின்றோம்..!
என்றும் அன்போடு
குழுவினர்கள்.
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment