அவ பேரு பாப்பா. ஆனால் சுட்டித்தனத்துலே அம்மோவ் தாங்க முடியாது. அடங்க
மாட்டா
அவ பள்ளிக்கூடம் பக்கத்துலே ஒரு கம்பந்தோட்டம். கூடப் படிக்கிற புள்ளங்க
கதிர் திருடப் போனாங்க. இவளும் கூடப் போனா. வயலுக்குச் சொந்தக்கரன்
திடீர்னு வந்துட்டான். எல்லாரும் விழுந்தடிச்சு ஓடினாங்க. இவதான்
எல்லரைக் காட்டிலும் சின்னவ. ஒரு பொந்துக்குள்ளே நுழஞ்சா. வெளியே வர
முடியல்லே. மாட்டிக்கிட்டு தவிச்சா. வயல்காரன் வந்துதான் பிடிச்சு
இழுத்து வெளியே கொண்டு வந்தான். அவ கவுன்லே இருந்து கதிர் விழுந்தா
அத்தனையும் சொத்தை. வயக்காரன் அவளைப் பாத்துட்டு சிரிச்சான்." மணிச்சாமி
மகளா, ஏம்மா இதுகளோடே சேந்தே. உனக்கு கதிரு பிடிக்கும்னா கூடை நிறைய உன்
வீட்டுக்கே கொண்டு வருவேனே"
என்ன இருந்தாலும் திருடித்திங்கறதில்லே இருக்கற ருசியே தனி. இந்த
கிழவங்களுக்கு என்ன தெரியும்னு நினைச்சிட்டு ஓடிப் போய்ட்டா
இன்னொரு சமயம். புளியம் பழத்துலே காயும் இல்லாம பழமும் இல்லாமே ஒரு நிலை
இருக்கும். அது பாப்பாவுக்குப் பிடிக்கும். அது வேணும்னு ஒரு புளிய மரம்
ஏறினா. இறங்க நினைச்ச போது பாவாடை கிளைலே மாட்டிகிட்டது. மரத்துலே
ஊஞ்சலாடினா. அதுக்குள் ஒருத்தன் மரத்தடியில் மாட்டைக் கட்டிட்டு
போய்ட்டான். கவுரவம் பாத்தா முடியுமா. புளிய மரப் பிசாசு மாதிரி
தொங்கிகிட்டே இருக்கணூம். கத்த ஆரம்பிச்சா.
ரோட்லே போனவங்க பாத்து அவளை இறக்கி விட்டாங்க
பாப்பவுக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் வீட்லே சொல்லாம
சினிமாவுக்குப் போய்ட்டா. வீடு திரும்பனா. வீடு உள்ளே பூட்டி இருந்ததது.
அப்பா வந்தாச்சு. அவ்வளவுதான். வாசல்லே இருந்த வேப்ப மரத்துலே ஏறி
மாடியில் குதிச்சு, வீட்டில் பின்புறம் இருந்த முற்றத்திலே குதிச்சா.
மெதுவா கதவைத் தட்டினா. கதவும் திறந்தது. அப்பா கையில் பிரம்புடன்
நின்னுகிட்டு இருந்தார். செம அடி. அழுதுகிட்டே தூங்கப் போனா. கனவுலே
பி.யூ சின்னப்பா சிலம்புச சண்டைக் காட்சி பாப்பாவின் உடம்பு வலி போச்சு
மரம் மட்டுமா ஏறுவா, சுவத்துலேயும் ஏறுவா. அம்மா எண்ணைதேய்க்க கூப்பீட்டா
காம்பவுண்டு சுவர் மேலே ஏறி ஓடுவா. பாவம் அம்மாவால் பிடிக்க முடியுமா.
அவங்க அலுத்துப் போய் உள்ளே போய்டுவாங்க
இவ அம்மாவை மட்டும் இல்லே டீச்சர்களையும் ஆட்டி வைப்பா. வகுப்பு நடக்கும்
பொழுது பெஞ்ச் மேலே ஏறி நின்னு ஆடுவா. பையன்கள் சிரிப்பாங்க. வாத்தியர்
திரும்பிப் பாத்தா சமத்தா உக்கந்திருப்பா. சில சமயம் மாட்டிக்குவா.
கையிலே பிரம்படி கிடைக்கும்.
பையன்களுடனும் சண்டை போடுவா. அவள் தான் பி.யூ சின்னப்பாவாம். கையில்
குச்சி எடுத்துக் கொண்டு பையன்களை சண்டைக்கு இழுப்பா.
பசங்க தான் அடி வாங்குவாங்க. இவளை அடக்க முடியல்லே. கோபம் வந்தால்
பையன்களைத் தள்ளி குத்துவாள். குஸ்தியாம். (அந்தக் காலத்தில்
பொண்ணுக்கும் பையனுக்கும் அந்த கிராமத்தில் அசிங்கம் தெரியாது)
அவளுக்கு சிறுத்தைப் புலின்னு பேர் வச்சு சுவத்துலே எழுதுவாங்க. இவ அதைப்
போய் கலர் சாக்பீஸால் அலங்காரம் செய்வாள். பயமோ , வெட்கமோ கிடையாது.
எல்லாரையும் ஆட்டி வைப்பா.
பாரதியார் ஊரில் இப்படி ஒருத்தி. புதுமைப் பொண் இல்லே. புரட்சிப்பொன்ணு.
தப்பு. பொல்லாத பொண்ணு
இவளைப்பத்தி கவிதை எழுதுங்கப்பா
இவ வேறு யாரும் இல்லே. நானே தான்.
எழுதுங்கப்பா. இப்போ நான் பாவம். அப்பாவி பொம்பிள்ளை.
சுட்டித்தனத்தை கவிதை வடிவில் எழுதுங்க. உங்க நினைவா வச்சுப்பேன்
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment